சந்திரகலை, சூரியகலை, சுழிமுனை

பாசம் எனப்படுகின்ற சந்திரகலை (இடது நாசியில் வருகின்ற மூச்சுக்காற்று). இது உடல்சார்ந்த ஒரு மூச்சுக்காற்று இயக்கமாகும். இது உடம்பை பேணும். பசுவாகிய சூரியக்கலை (வலது நாசியில் வருகின்ற மூச்சுக்காற்று). இது உயிரைச்சாரும். அதாவது ஆன்மாவை சார்ந்து இயங்கக்கூடிய மூச்சுக்காற்று இயக்கமாகும். பதியாகிய சுழிமுனை (இடது, வலது, நாசித்துவாரங்களுக்கு மேலாக இரு கண்ணிற்கு மையமாக கபாலத்தின் உட்புறத்தே நாசித்துவாரங்களும், கண் துவாரங்களும், காது துவாரங்களும், மூளைத்துவாரமும் ஒன்று கூடக்கூடிய புறத்தே புருவத்தின் மத்திக்கு, நேராக கபாலத்தின் மையத்திலே இடது வலது நாசித்துவாரங்களுக்கு மேலாக ஒரு மெல்லிய சவ்வினால் பிரிக்கப்பட்டு சாதாரணமாய் இணைப்புடன் இல்லாமல் தனித்து பிரிந்து உள்ளதும் ஒரு மெல்லிய மயிரிழை போன்ற நாடியாகி கண்ணுக்கும், வேறெந்த கருவிகளுக்கும் புலப்படாமல் உள்ள ஒரு அற்புத இயற்கையின் வரப்பிரசாதமான நாடியாகும். இதுவே பிரம்மநாடி. இதுவே ஈஸ்வர நாடி. இதுவே மரணமில்லாப் பெருவாழ்வை தரவல்ல நாடியாகும். பதி என்று சொல்லப்படுகின்ற சுழிமுனை நாடியானது பரமான்மாவைச் சார்ந்து இயங்குகின்ற நாடியாகும். இதன் இயக்கமே இறைநிலையை நம்முள் கொண்டும்.

சாதாரணமாக எல்லா மனிதருக்கும் இடதுநாசி வழியாக, வலது நாசி வழியாக சுவாசங்கள் வந்து போய்க்கொண்டிருக்கும். அது ஒரு லய கதியில் இயங்காது. அதாவது ஒரே சீராக இயங்காது. ஆனால் ஞானிகளை வணங்கினால்தான் சீராக இயங்கும். அப்படி சீரான இயக்கத்திற்கு நாடிகளைக் கொண்டு வர, ஞானிகளை வணங்கி வணங்கி போற்ற வேண்டும்.

போற்றி போற்றி துதித்து, உருகி உருகி தியானித்து தியானித்து, ஞானிகள் அருளைப் பெறப்பெற, அவர்தம் முன்சென்ம அருளினால் பூர்வ புண்ணிய பலத்தால் முன்சென்ம வாசனை தொடர்ச்சியினாலே ஞானிகள் அருளிற்கு பாத்திரமாகி அவர்தம் முன்சென்ம ஞானகுருவாய் அமைந்த ஞானியின் திருவடிக்கு அவர்தம் பக்தி சென்று ஞானகுருவின் அன்பிற்கு பாத்திரமாகி முற்பிறவி தொடர்புடன் தொடர்பு இச்சென்மத்திலும் ஏற்பட்டு நாடிகளை எப்படி சீராக்குவது?

எப்படி சமநிலைக்கு கொண்டு வருவது? எப்படி நாடிசுத்தி செய்வது? அதற்குரிய உணவு முறைகள் எவை எவை? எவைஎவை உனது தேகத்தை பாதிக்கும்? என்று உணர்த்தி சுமார் மூன்று வருடங்களுக்கு உப்பில்லாத வெறும் உணவினைக் கொடுத்து கொடுத்து, உடம்பிலுள்ள அசுத்தங்களை நீக்கும் மிகக் கொடுமையான வேதனையளிக்கும் பயிற்சிக்கு உட்படுத்தி ஞானகுரு தாயாய் அவர் தம்முடன் இருந்து அச்சாதகனை சேயாய் பாவித்து ஆறுதல் தேறுதல் கூறி அவன்தன் இலட்சியத்திலிருந்து விலகிடா வண்ணம் உடனிருந்து காத்தருள் புரிந்திடுவார்.

உடல் சிறிது தூய்மைப்படுத்திய உடன் ஞான குருநாதராய் அமைந்தவர் குருவிற்கெல்லாம் குருவாய் அமைந்த சித்தர்கோன் அகத்தியமகரிஷியிடம் அந்த சாதகனை ஞானநிலைதனிலே சூட்சுமமாய் ஆன்மாவைப்பற்றி அகத்தியர் திருவடிகளிலே அந்த ஆன்மாவைக் கிடத்தி “தாயே அகத்தீசா! இவன் என்பிள்ளை! எம்மால் ஆனதைச் செய்தோம்.

தாங்கள் இவனை சுத்தப்படுத்தி தாருங்கள். எம்பிள்ளை மீது கருணை காட்டுங்கள். எமக்கு எவ்வளவோ தொண்டுகள் செய்தான் இவன். இவனைக் காத்தருளுங்கள் தாயே!” என்று சாதகனுக்காக ஞானநிலை நின்ற ஞானகுரு இரங்கி அகத்தியர், திருவடி பணிந்து வேண்டிட உலக ஞானிகளில் அந்த சாதகன் இதற்குமுன் தொண்டு செய்திட்ட ஞானிகள் அனைவரும் ஒன்று கூடி அகத்தியரிடம் ஞானகுருவுடன் இணைந்து விண்ணப்பிக்க அனைவரது கூற்றினையும் கேட்கும் அகத்தியரும் மனமிரங்கி அச்சாதகனைச் சார்ந்து யாம் இவனை தூய்மைப் படுத்துவோம் என்றே உத்திரவாதம் அளித்து அச்சாதகனுக்கு அதற்கு மேலான பயிற்சிகளை தரத்துவங்கி அன்றுமுதல் அச்சாதகனை தமது வசமாக்கி அவன் தொண்டு செய்திட்ட ஞானிகள் கூட்டத்துடனே ஒன்று கூடியே அவனது தேகக்களிம்பை ஞானத்தலைவன் முருகன் வருகைக்கு உகந்ததாக ஆக்கிடவே துணிந்து செயலாற்றுவார்.

துணிந்துமே செயலாற்றிட அகத்தியர் நாடிசுத்தி, தேகசுத்தி என்றே பலவாறாய் துவங்கி செய்திட செய்திட சாதகன் தன்னிலை மறந்து உடல், உயிர், ஆன்மா மூன்றையும் ஞானகுருவின் வசம் முழுமையாக ஒப்படைத்து சரணாகதியாகியே வீழ்ந்திட மூன்று நிலை நின்றும் ஞானிகள் அனைவரும் ஒன்று கூடியே உணவு அளிக்க ஒரு ஞானி, உடம்பை காக்க ஒரு ஞானி, சுற்றுப்புறம் அமைக்க ஒரு ஞானி, பாதுகாக்க ஒரு ஞானி என்றே அச்சாதகன் தனக்கு அரூபநிலை நின்று ஞானிகளெல்லாம் ஒன்று கூடி ஒவ்வொரு நாளும் ஒரு பிரசவம் போல நிகழ்ந்திடும்படியான கவனத்துடன் அணுஅணுவாக நொடிநொடியாக கண்காணித்து கண்காணித்து உடம்பைப் பற்றிய மும்மலக் கசடை நீக்குவார்கள்.

தேகக்களிம்பு நீங்க நீங்க தேகம் தூய்மைபெறும். இவ்விதம் சுவாசப்பயிற்சியின் மூலம் உணவு கட்டுப்பாட்டு மூலமும், தேகத்தின் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தி ஏற்றி இறக்கி தேகத்தில் உள்ள தேவையற்ற கசடுகளை நீக்கி நீக்கி ஆறுமுகனாம் முருகப்பெருமான் வருகைக்காக தயார் செய்வர் ஞானிகளெல்லாம் சாதகன் தேகத்தை. சுமார் பதினான்கு வருடங்கள் இப்படி படாதபாடுபட்டு தேகத்தை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி நடந்திடும். தேகம் தேவையான அளவு தூய்மை பெற்றவுடன் ஆதிகுருநாதன் ஞானபண்டிதன் வருகைக்காக காத்திருப்பர் ஞானிகளெல்லாம். ஒரு சுபயோக சுபதினத்தினிலே சுபமுகூர்த்தத்திலே ஞானத்தலைவன் தன் திருவடிக்கு, அகத்தியர் தலைமையிலே ஞானக்கூட்டமெல்லாம் ஒன்று கூடியே ஞானியர் புடைசூழ ஞானபண்டிதன் வீற்றிருக்கும் திருச்சபைதனிலே அகத்தியரும் ஞானகுருவும் மற்றைய ஞானிகளும் சூட்சுமநிலையிலே சாதகன் ஆன்மாவை கொண்டு சென்றுமே தேவரீர் ஞானபண்டித எம்பிள்ளை இவன். எம்மை போன்றோர்க்கெல்லாம் உத்தமமாய் தொண்டுகள் செய்தவன், மகாபுண்ணியவான், பண்புடையோன், எம்மீது அளவிலா பக்தியுடையோன். இவன் தனக்கு நாங்களெல்லாம் காத்தருள் புரிவோம் என்றே வாக்களித்தோம். எங்கள் வாக்கு பொய்க்கா வண்ணமே எங்கள்மீது கருணை கொண்டு எங்கள்மீது இரக்கம் கொண்டு எங்களுக்காக இச்சாதகனை காத்து அருள் செய்து பிறவாநிலை அளித்திட உத்தாரம் தந்தருளுங்கள் என்றே மன்றாடி வணங்கி கேட்பர் தலை வணங்கா ஞானியர் குலாம், சீடன் பொருட்டு சாதகன் பொருட்டு தலைவணங்கி தலைவன் முன்னே மன்றாடி நிற்கும்.

தலைவனும் ஞானியர் வேண்டுகோள் தனக்கு செவிசாய்த்து சாதகன் தனக்கு பிறவா நிலையளிக்க உத்தாரம் தந்துமே தலைவன் வருகைக்காக தூய்மைப்படுத்தப்பட்ட தேகம்தனில் பிரவேசிப்பார்.

அதுவே கிருகமாகிய இந்த தேகத்தினுள் பிரவேசிக்கும் அற்புத நாளாம். கிருகப்பிரவேச நாளாம் உடலெனும் ஆலயத்துள் பிரவேசிக்கும் ஆலயப் பிரவேச நாளாம். அதுவே வாசி வசப்படும் நாளாம். அதுவே மூலக்கனல் தோன்றும் நாளாம். அந்நாளே மனித ஜீவிதத்தில் ஒரு மனிதன் பெறக்கூடிய மிக உயர்ந்த நாளாம்.

அப்படி சாதகன் தேகத்தை முருகப்பெருமான் சாதகன் சுவாசத்தோடு சுவாசமாக மூச்சுக்காற்றோடு மூச்சுக்காற்றாக கலந்து தேகப்பிரவேசம் செய்து புருவமத்தியின் உள்ளே மெல்லிய சவ்வினை கரைத்திட பேரருள் புரிந்து அச்சவ்வினை கரைத்து அச்சாதகன் உள்ளே உள்ள அற்புத பிரம்ம நாடியாம் சுழிமுனைதனிலே பிரவேசித்து தனது அற்புத அதிநுட்ப ஞானஇரகசியங்களை அவன் தம்முள்ளே உணர்த்தி அச்சவ்வினை மீண்டும் மூடாவண்ணமே அச்சாதகன் தன் அன்பினால் கூடிய ஞானக்கூட்டம் ஒன்று கூடியே, ஞானிகள் உடனிருந்து காத்து அருள்புரிவர்.

ஞானபண்டிதனின் அருள்நிறை ஆலயப் பிரவேசமாகிய சாதகனின் தேகத்தினுள் பிரவேசித்து மயிரிழை போன்ற மெல்லிய நாடியாம் சுழிமுனையில் பிரவேசித்த அந்த நாள் முதல்தான் அச்சாதகனுக்கு ராஜயோகம் ஆரம்பிக்கிறது.

யோகராசன் முருகன் சாதகனை சார்ந்திடும் தினமே, இராசயோகத்தின் முதற்கட்டமாகும் அதன் பின்னே பலபல பயிற்சிகள், பலபல சாதனைகள், பலபல சோதனைகள், பலபல வேதனைகள் என்றே பன்னெடுங்காலம் சுமார் பதிமூன்று வருடங்களுக்கு குறைவில்லாது இராசயோகம் பயின்று ஆறுமுகனார் அச்சாதகனை சார்ந்து நீக்க முடியாத மும்மலச் சேற்றை சிறிதுசிறிதாக அணுஅணுவாக அணுக்களினின்றும் நீக்கி உடம்பினுள்ளே சோதி தோன்றச்செய்து உடம்பையே சோதி வடிவமாக்கி பின் நான், அவன், அது என்ற வேறுபாடில்லாமல் அவன், அவள், அது என்ற வேறுபாடில்லாமல் தானும் தலைவனும் ஒன்றேயாகும்படி நீக்கமற கலந்து சோதி வடிவினனாக்கி சாதகனையும் தன்னைப் போலாக்கி தன்னுள் ஒருவனாக்கி தேகம்தனை விட்டு விலகியும் கலந்து நிற்பனன் ஞானத்தலைவன் முருகப்பெருமான்.

ஆதலின் மிகமிக கடினமான பூர்வசென்ம புண்ணிய பலத்தால், ஞானிகள் அருளால், ஞானிகள் உடனிருப்பால், ஞானிகள் தேகம் சார்ந்து பன்னெடுங்காலம் பாடுபட்டு ஞானபண்டிதன் உடம்பினுள் தங்கி பல வருடங்கள் யோகம் செய்து தேகமாற்றம் ஏற்படுத்தி தரக்கூடிய பலரது விடாத முயற்சியுடன் செய்து முடிக்க கூடியதுதான் இராசயோகமாகும்.

தனிமனித முயற்சியால், பணத்தாலோ, மற்றெந்த வகையாலோ, அறிவின் துணைகொண்டோ, எந்த விதத்திலும் செய்வதற்கு சாத்தியமே இல்லாத ஒரு யோகமே இராசயோகம்.

அவனருள் இல்லையேல் அவனை அறிய முடியாது, தன்னையும் அறிய முடியாது. முருகா! முருகா!! முருகா!!! என்றே உருகி உருகி தியானியுங்கள், யோகத்தின் தன்மை உணரப் பெற்று தலைவனையும் தன்னையும் உணர்ந்திடலாம் நல்வழி சென்று நலமாய் வாழலாம்.

-அடிகளார் ஆறுமுகஅரங்கர் உபதேசம்
ஓங்காரக்குடில் Ongarakudil
Wisdom of Siddhas சித்தரியல்
<3 Aum Muruga ஓம் மு௫கா <3





Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





Posted By Nathan Surya

Comments

Popular posts from this blog

மனிதனும் கடவுள் ஆகலாம்...

ஜீவதயவே ஞானவீட்டின் திறவுகோல்