மனிதனும் கடவுள் ஆகலாம்...

மனிதனும் கடவுள் ஆகலாம். கடவுளுடன் இரண்டறக் கலக்கலாம்.

சித்தர்கள் The Ascended Masters

மனிதனும் கடவுள் ஆகலாம் -ஆசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள் அருளிய உபதேசம்

ஆன்மீகத்தின் படிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பார்கள். மனிதன் கடவுளாக வேண்டுமென்றால் சரியை, கிரியை, யோக, ஞானம் ஆகிய நான்கும் அவன் அறிந்திருக்க வேண்டும். இதை அறியாமல் ஆன்ம லாபம் பெற முடியாது. 

சரியை என்பது பிற உயிர்களுக்கு நன்மை செய்தலும், நன்நெறியை கடைபிடித்து நடப்பதும், ஜீவகாருண்யமுமே சரியையின் முதல் படியாகும். சரியை என்பது இனிமையாக நடந்து கொள்ளல்; பொய் சொல்லாது இருத்தல்; நீதிக்கு உட்பட்டு பொருள் சேர்த்தல்; சிறு தெய்வ வழிபாட்டில் ஈடுபடாது இருத்தல்; புலால் உண்ணாது இருத்தல்; உயிர்க்கொலை செய்யாது இருத்தல்; இதெல்லாம் சரியை மார்க்கம். பண்புள்ளவனாக வாழ். சமுதாயத்தில் பண்புள்ளவன்;உயர்ந்தவன்; புண்ணியவான் என்று பெயரெடுப்பது சரியை மார்க்கம்.

கிரியை என்பது கடவுள் ஒருவன் உண்டு என்று அறிவதும், அதற்கு துணையாக இருப்பது உருவ வழிபாடாகும். ஆரம்பகாலத்தில் ஒரு உருவத்தை சுட்டிக்காட்டினால்தான் அதை பூஜித்து கடவுள் அருள் பெறுவார். கடவுளை எந்த உருவத்தில் வணங்கினாலும் கடவுள் மனமிரங்கி அருள் செய்வார். கிரியை மார்க்கம் என்பது ஞானிகள் யார் என்று அறிந்து அவர் திருவடிகளை பூஜை செய்து ஆசி பெறுவது கிரியை மார்க்கம்.


எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம்
அன்றேயிரங்கி யீந்தருளும் பதம்.
என்போன்ற வாக்குமிகு பொன்போன்ற
கருணைதந்து இதயத்திருக்கும் பதம்.

மகான் இராமலிங்க சுவாமிகள் அருளிய - அருட்பா - திருவடிப்புகழ்ச்சி.

ஆகவே கடவுள் அருள்பெற வழிபாடு செய்வதே கிரியை மார்க்கமாகும்.




யோகம் என்பது தன் உடல் கூற்றை அறிந்து அதற்குள் இயங்கும் ஆன்மாவை அறிந்து அந்த ஆன்மா இயக்கத்திற்கு மூச்சுக்காற்றுதான் காரணம் என்று அறிந்து அந்த மூச்சுக்காற்றும் நாள் ஒன்றுக்கு 21,600 சுவாசமாக(போகின்ற காற்று மற்றும் வருகின்ற காற்று) ஆக 21,600 முறை இயங்கினால்தான் ஆன்மா இயக்கமும் மனித வாழ்க்கையும் நடைபெறும். இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒன்றேயாகும். ஆகவே, மூச்சுக்காற்றை அறிந்து அந்த காற்றின் இயக்கமாகிய இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகும். இடகலை என்பது இடது மூக்கில் வருகின்ற காற்றும், பிங்கலை என்பது வலது மூக்கில் வருகின்ற காற்றும், சுழிமுனை என்பது புருவ மத்தியில் ஒடுங்குகின்ற காற்றும் ஆகும். இதை நன்கு அறிந்து ரேசக, பூரக, கும்பகம் ஆகிய தன்மையை உணர்ந்து காற்றை இழுத்தல், ஸ்தம்பித்தல், நிறுத்தல் ஆகிய ரகசியத்தை(காற்றை நிறுத்துதல் என்பது புருவ மத்தியாகிய சுழிமுனையில் காற்றை ஒடுக்குதல்) அறிவதே யோக மார்க்கமாகும். இது அனைத்தும் ஆசான் அகத்தீசன் அருள் இல்லாமல் யோகத்தை அறிந்துகொள்ள முடியாது.

ஞானம் என்பது இயற்கையின் இயல்பறிந்து அது உடம்பினுள் எவ்வாறு இயங்குகின்றது என்பதை அறிந்து, அந்த இயற்கை தூலதேகமாகிய புற உடம்பாகவும், சூட்சும தேகமாகிய அகஉடம்பாகவும் இருக்கின்ற இந்த இயல்பை அறிந்து அதே இயற்கை மும்மலமாகிய காமதேகமாகவும், மலமற்ற ஞானதேகமாகவும் அமைந்துள்ளது. இயற்கையின் இயல்பறிந்து அதனுடைய இயல்பாகிய (மாசு அல்லது களிம்பு) களிம்பு அற்றால் சதகோடி (100 கோடி) சூரியப்பிரகாசமான ஒளி உள்ளே தோற்றும். இதை அறிவதே ஞானமாகும். அந்த ஜோதியை காணவேண்டும் என்றால் ஆசான் ஞானபண்டிதன்,  ஞானத்தலைவன் முருகப்பெருமான் அருள்செய்ய வேண்டும்.

களிம்பறுத் தான் எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான் அருட் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே

=திருமந்திரம் உபதேசம் - கவி 114.

ஆகவே, சரியை, கிரியை, யோக, ஞானமாகிய நான்கும் ஆசான் அருள்கொண்டுதான் அறிய முடியும்.

மேற்கண்ட சரியை, கிரியை, யோக ஞானத்தின் சாரம்

சரியை என்பது நெறியுடன் வாழ்வதாகும். கடவுள் வழிபாடே கிரியை ஆகும். யோகம் என்பது மூச்சுக்காற்றைப்பற்றி அறிந்து மூச்சுக்காற்றை ஆசான் ஆசியோடு புருவ மத்தியில் ஒடுக்குவதே யோகமாகும். ஞானம் என்பது எல்லாம் வல்ல பரம்பொருள் உள்ளும் புறமுமாக இருப்பதை அறிந்து உள்ளெழும் ஜோதியை கண்டு தரிசிப்பதே ஞானமாகும்.





எல்லா ஞானிகளுக்கும் மூத்தோனும், ஞானவர்க்கத்தின் தலைவனுமாகிய முருகப்பெருமானது நாமங்களை மனம் உருகி “ஓம் முருகா” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ ,“ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ பூசித்திட்டால், பூசிப்பவர் பஞ்சமாபாவியாகினும் சரி, அவரது பாவங்கள் காலகிரமத்தில் பொடியாகுவதோடு, முருகன் நாமங்களை சொல்லிய அக்கணமே நவகோடி சித்தரிஷி கணங்களின் பார்வைக்கும் அவர் ஆளாகி ஜென்மத்தைக் கடைத்தேற்றும் வாய்ப்பைப் பெறுவர்.

முருகனது நாமங்கள் அவ்வளவு உயர்வானதா..?! எனில் ஆம், முருகனது நாமங்களுக்கு மிஞ்சியது வேறெதுவும் இல்லை. ஏனெனில் மூத்தோன், ஞானத்தலைவன் முருகனது ஆசி பெற்றவர்களே பிரம்மனும், விஷ்ணுவும், ருத்ரனும், நவகோடி சித்தரிஷிகணங்களும், முப்பத்துமுக்கோடி தேவரிஷி கணங்களும், சப்த ரிஷிகள், நவக்கிரக நாயகர்கள், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிமார்கள் இன்னும் அநேகம் அநேகம் கோடி தேவகணங்களும் முருகனது அருள் பெற்றதால்தான் அந்தந்தப் பதவிகளைப் பெற்றார்கள். ஆயின் முருகனது ஆசியே இந்தவிதமான உயர்வைத் தரும். ஆதலின் தலைவன் முருகனது நாமத்தை சொன்னால் யாரடா அது என் தலைவனை அழைப்பது..?! உன்னைக் காக்க நாங்களெல்லாம் இருக்கின்றோமென அழைப்பவர் அறவழி செல்பவராயின் அருள்வேலி போட்டுவிடுவார்கள். எனவே தலைவன் முருகன் வருமுன்னே கணப்பொழுதினிலே எல்லா சக்திகளும் தலைவனுக்கு முன்னே உடன் விரைந்து அழைத்தோர் தம்மை சூழ்ந்து காத்தருளும். அப்பப்பா அப்பப்பா என்னவென்று சொல்வது முருகன் ஆற்றலை, என்னவென்று சொல்வது முருகன் பெருமையை. முருக நாமமே உயர் நாமம், அதற்கிணை இவ்வுலகினிலேயே, ஏன் இப்பிரபஞ்சத்திலேயே கிடையாது. இனியும் தோன்ற போவதும் இல்லை.

பிரணவத்தின் சூத்ரதாரியான முருகனே அனைத்திற்கும் ஆதாரமாகி இயக்கமும், ஒடுக்கமுமாகி எல்லா ஜீவர்களிடத்தும் கலந்து நின்று இயற்கையோடு இயற்கையாய் கலந்துவிட்டபடியினாலே தேவரிஷி கணங்களும், சர்வ சக்திகளும் மட்டுமல்ல, இயற்கைக் கடவுளால் படைக்கப்பட்ட அத்துணை உயிருள்ள ஜீவராசிகளும் ஆசிகளை வழங்கிடும் அவ்வளவு உயர்ந்த ஆற்றலுடையது முருகனின் நாமங்கள். ஏன் ஜடப்பொருள்கள் கூட கட்டுப்படும்.

அற்புதமான சக்திகளை அருளவல்லதும், ஞானத்தை ஊட்ட வல்லதுமானதும், அனைத்தும் தரவல்லதும், ஏன் முருகனைப் போலவே ஆக்கி கொள்ளக்கூடிய வல்லமைகளையும் அந்த முருகனது நாமங்களே நமக்கு அருளுமென்றால் எப்பேர்ப்பட்ட ஆற்றலுடையது முருகனின் நாமங்கள்.

எல்லாம் வல்ல முருகனது நாமங்களை சொல்லி ஆசிபெற விரும்பினால், ஜீவதயவே வடிவான முருகனுக்கு பாத்திரமான உலக உயிர்களுக்கு துன்பம் செய்யாது, உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்தசைவ உணவை மேற்கொள்ளவேண்டும்.

தினம் தினம் மறவாமல் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் முருகனது நாமங்களை சொல்லி பூசை செய்திட வேண்டும். முருகனது ஜீவதயவு தோன்றுமிடங்களான உலகஉயிர்கள் துன்பம் கண்டு இரங்கி இதம் புரிவதோடு மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிக்க வேண்டும் என்பதுவே முருகனது ஆசியைப் பெற முதன்மைத் தகுதிகளாகும்.

முத்தர்கள் போற்றும்
முருகப்பிரான் திருவடியை
நித்தமும் போற்றிட
நினைத்தவை சித்தியே.


-அடிகளார் ஆறுமுகஅரங்கர் உபதேசம்

ஓங்காரக்குடில் Ongarakudil


நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3


Comments

Popular posts from this blog

சந்திரகலை, சூரியகலை, சுழிமுனை

ஜீவதயவே ஞானவீட்டின் திறவுகோல்